காய்ச்சலும் பொதிகைமலையும்
ஸ்பிக் நகர்- வீட்டிற்குள் அப்பா நுழையும் போதே சோம்ஸ் சோம்ஸ் என்று அழைத்தவாறே வந்தார்.அம்மாவின் குரல், "இன்னும் அவனுக்கு காய்ச்சல் விட்டபாடில்லை, உள்ள படுதிருக்கான்" என்றது.
"ஆஸ்பதிரிக்கு கூப்பிட்டு போனியா. பிளட் ரிசல்ட் வந்ததா" இது அப்பா
"வந்ததுங்க டைப்பாய்டு இல்லையாம் என்னணு அவருக்கும் புரியலை. மதுரைக்கு எழுதிதரேன் போயி பாருங்க-நு சொல்றாருங்க"
அம்மா சொல்லும்போதே சோம்ஸ் பெட்ரூமிலிருந்து சோர்வாய் வெளியே வந்தான் அவனுக்கு ஒரு வாரமாய் கடும் ஜுரம் மதியம் வரை உடல் நன்றாக இருக்கிறது. அதன் பின் வரும் ஜுரம் காலை வரை படுத்தி எடுக்கிறது.
மருந்து கடையில் மாத்திரையில் ஆரம்பித்து ஸ்பிக் நகர் டாக்டரிடம் ஊசி போட்டு முடியாமல், தூத்துக்குடி டவுன் டாக்டர் வரைக்கும் போயி ரத்தம் வரை பார்த்தாச்சு, ம்ம்ம்.. இப்ப மதுரை வரைக்கும், என்ற ஆயாசம் அவன் கண்களில் தெரிந்தது.
கீழ் வரிசையில் உள்ள தெத்துபல் தெரிய அழகாய் சிரிக்கும் சோம்ஸின் முக வாட்டத்தை பார்த்த அவன் அப்பா மதுரைக்கு எல்லாம் வேண்டாம். நம்ம பலவேசத்தின் சித்தப்பா தென்காசியில் இருக்கிறார் அவரை பார்த்து வருவோம் என சொல்ல தென்காசிக்கு பயணம் தயாரானது.
அடுத்த நாள் தென்காசி சன்னதி தெருவில் சோம்ஸும் அவன் அப்பாவும்,
திண்ணையில் தாயம் விளையாடி கொண்டிருந்த கும்பலிடம் அவர் விலாசத்தை இவர்கள் விசாரிக்க,
இவர்களை திரும்பி பார்த்த ஒருவன்
"அவரு வேலை செய்வது என்னவோ அரசாங்கத்தில் தான் ஆனா அப்ப அப்ப பொதிகை மலை ஏறிடுவார். ஏறினா இறங்க மாதம் ஒன்னோ ரண்டோ ஆகும்" என்றான்.
சோம்ஸு ஒருவித பார்வையாய் அவன் அப்பாவை பார்க்க,
கட்டையை உருட்டியவன் உருட்டிய கையோடு நிமிர்ந்து இவர்களை பார்த்து
"இல்ல இல்ல அவரு வீட்டில தான் இருக்கார், அதோ பாருங்க அந்த நாலாவத இல்ல ஒரு வீடு அது தான்" என்றான்.
இவர்கள் வீட்டை பார்த்து நடக்க விளையாடி கொண்டு இருந்தவர்கள் ஏதோ பேசி சிரிப்பது இவர்கள் காதில் விழுந்தது. சோம்ஸ் அவனை அறியாமல் அவர்களை திரும்பி பார்த்தான்.
சிறிய வீடு ஆனால் நேர்த்தியா இருந்தது அப்பாவும் அவரும் பேசி கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் இருவருக்கும் மோர் கொண்டு வந்து கொடுத்தார்.
மோரை குடித்த படி ஜூரத்தினால் உண்டான ஆயசத்துடன் அப்பாவையும் அவரையும் மாறி மாறி சோம்ஸ் பார்த்தான். அவன் பார்வை அப்பாவை தவிர்த்து அவர் மேலயே படிந்தது.
நல்ல ஒடிசலான தேகம், மேலாடை போடவில்லை, வயிறு உள்வாங்கியிருந்தது, இடுப்பில் காவி வேட்டி, மழிக்க பட்ட முகம். வயது ஒரு நாற்பத்தி ஐந்து இருக்கும், நெற்றியில் மஞ்சளும் குங்கமமும் கலந்த கலவை போல் ஏதோ தீட்டி இருந்தார். கண்கள் பிரகாசித்தது இல்லை ஜொலித்து கொண்டு இருந்தது அவர் கண்களை பார்க்க பார்க்க சோம்ஸுக்கு உடல் சிலிர்த்தது.
இவன் பார்த்ததை அவர் உணர்ந்த மாதிரி சடாரென்று திரும்பி இவனை பார்த்தார். அந்த பார்வை அவனை ஊடுருவிய மாதிரி இருந்தது.
அவர் அப்பாவை பார்த்து அருகில் உள்ள சேரில் அமர சொன்னார். இவனை அழைத்து அவர் அருகில் உள்ள இரும்பு பெஞ்சில் ஒரு பாய் விரித்து இருந்தது அதில் உட்கார சொல்லி வலது கையை நீட்ட சொன்னார்.
அவரின் வலது கை விரல்கள் சோம்ஸின் வலது கை நாடியில் படர்ந்தது. அந்த வினாடி மெலிதான மின்சாரம் பாய்ந்த உணர்வை பெற்ற சோம்ஸ் அவரையே பார்த்தான்.
அவர் கண்கள் மூடி யோசனையில் இருந்தவர் போல இருந்தார். கண்களை திறக்காமல் அவர் "தம்பி உங்கள் இடது கையை ஊணி இருக்கீங்க அதை எடுத்து உங்கள் தொடையில் வையுங்கள்" என்றார்.
அவர் தீண்டலினால் ஏற்பட்ட சுகானுபவத்தில் இருந்து மீளாத சோம்ஸ் அவனை அறியாமல் அவன் கையை நகர்த்தி அவன் தொடையில் வைத்தான்.
கண்ணை திறக்காமல் அவர் அவனிடம் "உங்களுக்கு எப்பவாது பிட்ஸ் வந்து இருக்கா? இது வரைக்கும் உங்களுக்கு இரண்டு முறை வந்திருக்கணுமே?" என கேட்க
அவன் அணிச்சையாக "இல்லை" என்றான்.
"ஆமாங்க, அவன் சிறு பிள்ளையாய் இருக்கும் போது வந்திருக்கு" என அப்பா சொல்ல
அவர் அவன் கையை விடுவித்தார்.
சோம்ஸுக்கு அவன் உடல் இயல்புக்கு வந்தாப்ல இருந்தது. மீண்டும் ஜுரத்தினால் ஏற்பட்ட களைப்பு ஒட்டிக் கொண்டது.
அவர் அப்பாவை பார்த்து "தம்பிக்கு மருந்து கொடுக்கணும்" என்று சொல்லிவிட்டு அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்றார்.
சோம்ஸ் அந்த ரூமை பார்த்தான் மிக சிறிய ரூம் அது, அதில் ஒரு ஆஞ்சநயர் சிலை இருந்தது அதன் எதிரே ஒரு மனையும் அருகில் ஒரு மனையும் இருந்தது. இடமும் அவ்வளவே, அரை முழுக்க ஒரு வித நறுமணம் பரவி இருந்தது.
சிலையின் எதிரே அவரும் பக்கவாட்டில் சோம்ஸும் அமர்ந்தனர். அவர் கண்கள் சிலையின் மீதே இருந்தது. வாய் ஏதோ மந்திரத்தை முணு முணுத்தது, அவர் தொடர அந்த இடத்தில் ஒரு வித அதிர்வை சோம்ஸ் உணர்ந்தான்.
சோம்ஸ் அவரை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கண்கள் பாதி மூடியும் மூடமாலும் இருந்தது வாய் மந்திரத்தை தொடர்ந்து கொண்டு இருந்தது.
அவர் இருந்த நிலையிலே மாறாமல் அவர் எதிரே இருந்த சிறு பெட்டியை திறந்து ஒரு சிட்டிகை பச்சிலை பவுடர் எடுத்து சோம்ஸிடம் நீட்டினார் அப்போதும் அவர் கண்கள் பாதி மூடிய நிலையில் இருந்ததது
துவர்ப்பும் கசப்பும் கலந்த அந்த பௌடரின் சுவை சோம்ஸின் உச்சியில் உரைத்தது.
அவர் இவன் பக்கம் திரும்பினார் அவரது வலது உள்ளங்கையை அவன் தலையில் வைத்தார்.
சோம்ஸ் அவனை அறியாமல் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் முதுகு தண்டுவடத்தின் அடி பகுதியில் இருந்து ஒரு வித வலியோ உணர்வோ கிளம்பியது போல் இருந்தது அது வேகமாக பரவி உச்சித் தலையில் மோதி கண்களில் மின்னல் வெட்டியது போல் இருந்தது. மூடிய கண்களில் தோன்றிய வெளிச்சத்தில் உணர்வு கலந்தது போல் இருந்தது. அவன் உடல் நடுங்கியது இப்போது ஆழ்ந்த இருட்டு அதில் ஊடுருவி எங்கோ பறப்பது போல் அவனுக்கு இருந்தது இடை விடாத நெடிய பயணம் தூரத்தில் சிறு சிறு வெளிச்ச சிதறல்கள். ஆதியும் அந்தமும் இல்லாத பிரபஞ்சதில் தானும் மிதப்பதாக உணர்ந்தான்.
நீண்ட அமைதி எங்கோ வானத்தில் இருந்து அவர் குரல் கேட்பது போல் இருந்தது.
"நீ ஏதோ பார்த்து பயந்திருக்கே" அவர்
"இல்லை" அவன்
"எனக்கு சரியாக சொல்ல முடியவில்லை உனக்கு தெரிகிறதா என்று பார்" என்றார்
"ஒரு பெரிய பள்ளம் அதன் அடியில் நீர், அந்த பள்ளம் பாதி மூடி உள்ளது. பக்கத்தில் ஒரு ஆலமரம். இந்த இடம் உனக்கு தெரிகிறதா பார்" என்றார்.
இவன் யோசித்து தெரிகிறது "அந்த இடம் என் ஹாஸ்டல் அருகில் உள்ளது" என்றான்.
இப்போது எல்லாம் சரி ஆகி விட்டது என்றார்.
மீண்டும் மௌனம், சிறிது நேரம் கழித்து,
"காலம் உன்னை என்னிடம் அனுப்பி உள்ளது, என் கூடவே இருக்கிறாயா?" அவர்.
"சரி" அவன்.
"உன் பந்தங்களையும் உறவுகளையும் இப்போதே அறுத்து விடு." அவர்
அவனிடம் நீண்ட மௌனம்.
அவர் கண்களை திறந்து அவனை பார்த்தார்.
அவன் முகம் அஷ்ட கோணலாக மாறிக்கொண்டிருந்தது. எதையோ உணர்வது போல தெரிந்தது.அவர் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
சோம்ஸின் கண்களுக்குள் தெரிந்த நட்சத்திரங்கள் எல்லாம் முகங்களாக மாறின. அப்பா , அம்மா , தம்பி, நண்பர்கள், உறவுகள் என சுழற்றி அடித்தன. அம்மாவும் அப்பாவும் அவன் இரு கண்கள் வழியே புகுந்து அவனுள் கலந்த மாதிரி இருந்தது.
"ஓ" வென்று அலறி எழுந்தான், எழுந்த வேகத்தில் இடது கால் வலது காலை இடர வலப்பக்கமாய் திரும்பி கதவை தள்ளி ஹாலுக்குள் புகுந்து சேரில் உட்கார்ந்து இருந்த அவன் அப்பா காலில் விழுந்தான்.
அப்பா அவனை தூக்கி அணைக்க இவன் அடங்கினான்.
அப்பாவையும் மகனையும் பார்த்த படி ஒரு புன்னகையுடன் பூஜை அறை வாசலில் அவர் நின்றிருந்தார்.
அப்பா அவரை ஏறிட்டு பார்க்க, சோம்ஸ் அவரை பார்க்காமல் தரை பார்த்து நின்றான்.
அவர் புன்னகை மாறாமல் அவனுக்கு எல்லாம் சரி ஆகி விட்டது. இனி அவனுக்கு எப்போதும் காய்ச்சல் வராது என்றார்.
அப்பா சோம்ஸின் உடல் குளிர்ச்சியை உணர்ந்தார்.
சோம்ஸ் நிமிர்ந்து அவரை பார்க்க அவர்
"தம்பி நீங்க இன்று எனக்கு ஒரு பாடம் சொல்லி கொடுத்து இருக்கீங்க. தாய், தந்தை சேவையை விட உலகில் எதுவும் பெரிதில்லை என்பதை எனக்கு புரிய வைத்தற்கு நன்றி , போயி வாங்க" என்றார்
அப்பாவுக்கு ஏதோ புரிந்தது மாதிரியும் இருந்தது புரியாமல் மாதிரியும் இருந்தது. அவரை பார்த்து கை கூப்பி வணங்கி மகனை பெருமையாக பார்த்து தோள் தொட்டு அழைத்து வெளியேறினார்.
அப்பாவும் மகனும் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையம் நோக்கி நடக்க அந்த திண்ணையில் அவர்கள் இன்னும் தாயம் உருட்டிக்கொண்டிருந்தனர். தூரத்தில் தெரிந்த பொதிகை மலை இவர்களை பார்த்து புன்னகைத்த மாதிரி இருந்தது.
பின்குறிப்பு:
இந்த கதை என் நண்பர் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்ல அதிலிருந்து புனைய பட்டது.
- வீ பொ திரு
No comments:
Post a Comment